இந்தியாவின் முதல் தேர்தலில் முதல் நபராக வாக்களித்த 102 வயது நபருக்கு வாக்குச்சாவடியில் உற்சாக வரவேற்பு

718 0

இந்தியா விடுதலையடைந்து 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் நபராக வாக்களித்து, தொடர்ந்து 31-வது முறையாக இன்று வாக்களிக்க வந்த 102 வயது நபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து 15-8-1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நமது நாட்டின் மக்களாட்சி முறை வகுப்பட்டு, குடியரசு நாடான பின்னர் முதன்முதலாக 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பாராளுமன்றத்துக்கு பொது தேர்தல் நடந்தது.
ஆனால், டெல்லியில் இருந்து நீண்ட தூரத்தில் இருப்பதாலும் அடர்த்தியான பனிப்பொழிவு உள்ளிட்ட தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டும் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் மட்டும் 23-10-1951 அன்று முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் கின்னாவ்ர் மாவட்டத்தில் உள்ள மண்டி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்பா பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு அதிகாலையிலேயே வந்து காத்திருந்து சரியாக அன்று காலை 7 மணிக்கு இந்தியாவின் முதல் வாக்காளராக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியவர், ஷியாம் சரண் நேகி. அப்போது பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவருக்கு தற்போது வயது 102.
அதன் பின்னர் பல பஞ்சாயத்து தேர்தல்கள், 16 பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் 14 சட்டசபை தேர்தல்கள் என 30 பெரிய தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வந்துள்ள ஷியாம் சரண் நேகி, செவித்திறன் மற்றும் கண்பார்வை மங்கிய நிலையிலும் கடுமையான கால்வலிக்கு இடையிலும் இன்று வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை 31-வது முறையாக நிறைவேற்றினார்.
அவர் வாக்குச்சாவடிக்கு வந்தபோது மேளதாளம் முழங்க தேர்தல் அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சி காண்போரை பரவசமடைய வைத்தது.
மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்பது எனது கடைசி ஆசை என்று நேற்று குறிப்பிட்டிருந்த இவர் கட்சியின் சின்னங்களை பார்க்காமல் உங்களுக்காக நேர்மையாக பணியாற்றக்கூடிய வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.