காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
காவிரி நீர் பிரச்சனையில் நடுவர் மன்ற உத்தரவை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டு இருந்தது.
முதலில் இதற்கு சம்மதித்த மத்திய அரசு பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மறுத்து விட்டது.
பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று கோர்ட்டில் தெரிவித்தது.
மத்திய அரசின் இந்த திடீர் முடிவால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தற்போது டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறந்து விடாததால் சம்பா சாகுபடி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஒருமித்த குரல் எழுப்பி வருகிறார்கள். தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து நாளையும், நாளை மறுநாளும் (திங்கள், செவ்வாய்கிழமை) ஆகிய 2 நாட்கள் 48 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்து கட்சிகளுக்கும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்று தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் என 200 இடங்களில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் ரெயில் மறியலில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, த.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மாதவரம் சுதர்சன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தென் சென்னையில் தா.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராமசாமி, திருவாரூரில் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், ஜி.பழனிச்சாமி, வை.செல்வ ராஜ், வடசென்னையில் மு.வீரபாண்டியன் தலைமையிலும் ரெயில் மறியலில் பங்கேற்கிறார்கள்.
தஞ்சையில் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெறும் ரெயில் மறியலில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னையிலும், பொது செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்திலும், சிந்தனைச் செல்வன் கடலூரிலும் மற்றும் நிர்வாகிகள் ஆங்காங்கே நடைபெறும் மறியலிலும் கலந்து கொள்கிறார்கள்.
நாளை நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி கலந்து கொள்ளும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு ரெயில் மறியல் போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி அனைத்து ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. மறியலுக்கு வரும் கட்சி தொண்டர்களையும், விவசாயிகளையும் கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அணி அணியாக 2 நாட்களுக்கு போராட்டம் நடைபெறுவதால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு 2 நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது.