மனிதப் படுகொலைகளைப் புரிந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்த பாரிய தவறென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி வென்றால் இந்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் பயங்கரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்
இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மனிதப் படுகொலைகளைப் புரிந்த கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்த பாரிய தவறாகும்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினை கோட்டாபய ராஜபக்ஷ தீனிபோட்டு வளர்த்துள்ளார் என அரச தரப்பால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளுக்கு தீனிபோட்ட கோட்டாபய ஜனாதிபதியானால் மீண்டும் அந்த பயங்கரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது.
அத்தோடு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.