வீதியில் சைக்கிளில் சென்றவரை நையாண்டி செய்து இரும்புத்தடியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை(18) மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நோன்பு காலம் என்பதால் தனது குடும்பத்திற்கு என ஸம் ஸம் வீதியை சேர்ந்த முகம்மது பஸில் தம்சீர் (வயது 49) என்பவர் மீன்களை கொள்வனவு செய்து அதனை தனது வீட்டிற்கு சென்று கொடுத்து விட்டு வெளியேறி வீதியில் சென்றுள்ளார்.
அதே நேரம் அவ்வீதியை சேர்ந்த மருதமுனை வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றுகின்ற ஏ.எம் தமீம் என்பவர் திடிரென இரும்பு குழாயினால் தலையில் பலமாக தாக்கி தப்பி சென்றுவிட்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த முகம்மது பஸில் தம்சீர் என்பவரை அயலவர்கள் மருதமுனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை மேற்கொள்ள மறுக்கப்பட்டதாக பாதிக்கப்ட்டவரின் உறவினர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.மேலும் அடித்த சந்தேக நபர் அதே வைத்தியசாலையில் நின்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
எனினும் அங்கும் சிகிச்சை பலனளிக்கமுடியாமையினால் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது சுயநினைவிழந்து சிகிச்சை பெற்று வருவதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
தாக்குதலின் நோக்கம்
கடந்த 2016 அன்று படுகாயமடைந்த நபருடன் முரண்பட்டு சமாதானமாக செல்வதாக தெரிவித்து வந்த சந்தேக நபர் தற்போது தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காயமடைந்த நபரை அவரது வீட்டருகே நிற்கின்ற இளைஞர்கள் முதல் கொண்டு தாக்கியவர் வரை கேலி செய்வதாகவும் இதன் காரணமாகவே 2016 வரை சண்டை ஒன்று ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதானம் ஆனதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் சில முக்கியஸ்தர்களின் பிள்ளைகளும் இத்தாக்குதலில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என அங்குள்ள மக்கள் பெயர்கள் சிலவற்றை குறிப்பிட்டு ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
மக்களின் ஆதங்கங்களை அவ்விடத்திற்கு சென்ற கல்முனை மாநகர சபை மேயர் றகீப் கேட்டதுடன் உரிய நடவடிக்கை சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.