இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாதபோதிலும்,சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என தாதியர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் கேட்டுள்ளார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது குழந்தையைக் கூட கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை நாம் உலகில் எங்குமே கண்டதில்லை. இஸ்லாம் தற்கொலையை எதிர்க்கின்றது. தற்கொலை செய்பவருக்கு நிரந்தர நரகம் என்று சொல்கிறது. நல்ல நோக்கத்துக்காகக்கூட தற்கொலை செய்ய முடியாது.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும். நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடாது.
சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான சம்பவங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நோயாளிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்ய வேண்டும். சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.