ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்னும் தலீபான் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. அங்கு பரவலாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள ஹெராத் மாகாணம், ஒபே மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது.
மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரியின் கார், சம்பவ இடத்தை கடந்து சென்றபோது குண்டு வெடிப்பு நடந்தது. அப்போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். எனினும் இந்தக் குண்டுவெடிப்பில் 5 குழந்தைகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் மாவட்ட நிர்வாக அதிகாரியின் வாகனமும், பொது மக்களின் வாகனங்களும் சிக்கி சேதம் அடைந்தன.
இந்த குண்டு வெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலீபான் பயங்கரவாதிகள்தான் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு குண்டூஸ் மாகாணத்தின் தலைநகரான குண்டூஸ் அருகே ஆக் மஸ்ஜித் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.