அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக பேச சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை

362 0

sivasakthi-ananthanஅரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேச்சுக்கு செல்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே தமது சொந்த காணிகளில் மீள்குடியேறியிருக்கின்றனர். ஏனையவர்கள் கால்நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள்.

மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது சொந்தக்காணிகளில் வசித்தாலும் கூட அவர்களுக்கு தேவையான நிரந்தர வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்படாத நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் வருடந்தோறும் ஏற்படும் பருவமழை காலங்களிலும், கடும் வெப்பம் நிலவும் காலங்களிலும் தற்காலிக வீடுகளில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

7 வருட காலத்தில் இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதில் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் பாராமுகமாகவே செயற்பட்டுவருகிறது.

நாங்கள் புதிய அரசாங்க ஆட்சியிலும் கூட 65,000 வீட்டுத்திட்டத்தை 130,000 மாற்றி 21 இலட்சமான அந்த தொகையை இருவருக்கு வழங்குமாறும் கோரியிருந்ததோடு பொருத்து வீடு என்பது எமது பகுதி காலநிலைக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் நிரந்தரமான வீடாகவே அமைக்குமாறும் கேட்டுள்ளோம்.

குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் உட்பட மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இந்த பொருத்து வீட்டை நிரந்தரமான வீடாக வழங்குமாறு கேட்டிருந்தும், யாரும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்தவாரம் கூட சுவாமிநாதன் தலைமையில் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த இடத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அந்த இடத்திலும் சுவாமிநாதன் பொருத்து வீட்டைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். எவரும் இந்த வீட்டை தருவதற்கு முன்வருகின்றார்கள் இல்லை எனவும் கூறினார்.

ஆனால் அரசாங்கம் குறைந்தபட்சம், இந்த போரால் பதிக்கப்பட்டு உயிரிழப்புகள், சொத்திழப்புகள் என்பவற்றால் பாதிக்கப்பட்டோர் மட்டுமன்றி காணாமல்போனோரின் உறவுகள், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர்கள் அடிப்படை வசதிகள் எதும் இன்றி உள்ளதைப்ப பற்றி சிறிதேனும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை.

இந்த 7 வருடங்களில் எந்த வித நிவாரணங்களையும் வழங்காமல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள முப்படையினரின் நலன் தொடர்பாகவே ஜனாதிபதியும் பிரதமரும் பேசிக் கொண்டிருக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அமைக்கவுள்ள வீடுகளையாவது நிரந்தரமான வீடுகளாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதேச மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பேசப்பட்டாலும் கூட அதில் எந்தவிதமான முடிவும் எடுக்கமுடியாத நிலை உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் மக்களினுடைய அபிவிருத்தி, வாழ்வாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவில்லை.

இதற்குமப்பால் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை காணும் விடயத்திலும் கூட அக்கறையற்ற போக்கே உள்ளது. இந்த வியடம் தொடர்பாக கூட்டமைப்பினதும், எதிர்க்கட்சியினதும் தலைவர் என்ற வகையில் சம்பந்தன் ஐயா தனது மௌனமான போக்கை கலைக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களின் உடனடிப்பிரச்சனைகள் என்ன, அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாக எமது கட்சி கூட்டங்களில் பல தடைவை வலியுறுத்தியும் கூட இந்த அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் ஓர் உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு சம்பந்தனும் விரும்பவில்லை, அரசாங்கமும் விரும்பவில்லை.

ஆனால் மக்கள் மாவட்டம் தோறும் தங்களது பிரதிநிதிகளுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தை பாதுகாப்பது தான் எதிர்க்கட்சி தலைவரினதோ அல்லது கூட்டமைப்பின் தலைவரினதோ கடமை என்று இல்லாமல், எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு நாங்கள் மதித்து நடக்கவேண்டும்.

இதில் கூட்டமைப்பு தலைவர் மௌனத்தை இராஜதந்திர ரீதியாக பின்பற்றுகின்றார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசாங்கத்தில் உள்ள பிரதான இரு கட்சிகளும் தங்களது நிகழ்ச்சி நிரலில் சரியாக சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நாங்கள் இழுபட்டு செல்ல முடியாது. கூட்டமைப்பின் தலைவர் எந்த விதமான அழுத்தமும் கொடுக்காமல் மென்போக்காக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

அடுத்த ஆண்டை பொறுத்த வரையில் தெற்கிலும், வடக்கிலும் பல தேர்தல்கள் நடக்கவுள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு இந்த அரசாங்கத்துடன் போய் எதையும் செய்ய முடியாது.

ஆனால் சம்பந்தன் ஒரு சிலரோடு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றார். அதனால் 2016 முடிவதற்குள் தீர்வு வரும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். ஆகவே அந்த நாட்களும் இன்னும் சொற்ப நாட்களாகவே உள்ளது என சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

மேலும், இதுவரை தீர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை எதுவும் உருவாகவில்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆகவே எமக்கு ஆதரவளித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியமை குறிப்பிடத்தக்கது.