தாக்குதலுக்கிலக்கான முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு ….!

413 0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அண்மையில் முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியதுடன், அத்தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘தீவிரவாதம் எந்த மதத்தையும் சார்ந்ததில்லை என்பதுடன், உலகின் எந்தப் பாகத்தில் தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெற்றாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் அதனைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு இலங்கையில் மீண்டும் சமாதானம் திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்’ என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் சென்னையிலுள்ள இலங்கை அதிகாரிகளிடம் கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.