சுகவீனமடைந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதியில் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், அந்த யுவதி உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அடையாளந்தெரியாத நபர் ஒருவர் 27 வயதான குறித்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
யுவதி தொடர்பில் தமக்கு எந்தத் தகவலும் தெரியாது எனக்கூறியே அந்நபர் யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்ததாக வைத்தியசாலை பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் உயிரிழந்த யுவதி மருதமுனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதித்த நபர் கண்டியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே உயிரிழந்த நிலையில் சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதால், இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.