ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக நான்போட்டியிடுகின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன், இது குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச இல்லாவிட்டால் நான் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பி;ன்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளதை சந்தர்ப்பவாதமாக கருதமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நான் நிச்சயமாக ஒரு வாய்ப்பாக அல்லது சந்தர்ப்பமாக கருதவில்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தேர்தல்கள் குறித்து நான் அக்கறை காண்பிக்கவில்லை எனது தேசம் குறித்தே நான் கரிசனையுடன் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் கவனம் செலுத்திய விடயமொன்று அழிக்கப்பட்டுவிட்டது,இதன் காரணமாக நான் கவலையடைந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நவீனத்துவமான 5000 புலனாய்வாளர்களை நான் பணியில் ஈடுபடுத்தினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யுத்தகுற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச நீங்கள் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றீர்கள்,தனிநபர்களின் சுதந்திரம் குறித்து கருத்துவெளியிடுகின்றீர்கள்,நீங்கள் நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை வெளியிடுகின்றீர்கள் ஆனால் இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளன என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசத்தில் பாதுகாப்பின்மை நிலவினால் என்ன நடக்கும் சுதந்திரம் நிலவுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈவிரக்கமற்ற ஆபத்தான வலுவான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்த இராணுவம் இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவையனைத்தும் கொலைகாரர்களால் காடையர்களால் செய்யப்பட்டதா என நான் ஆச்சரியப்படுகின்றேன், எங்கள் இராணுவத்தினர் அவ்வாறானவர்கள் என நாங்கள் தெரிவிக்கின்றோமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனிநபர்கள் சிலர் இருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரையும் அவ்வாறானவர்களாக பொதுமைப்படுத்துகின்றீர்கள்,சர்வதேச அளவிலும் அவர்கள் இதனை செய்கின்றார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.