10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

319 0

இறுதி யுத்தத்தில் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி கடந்த 10 வருடங்களாக போராடி வரும் நிலையில், இனியும் தாமதிக்காது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் சங்கத்தினால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இந்த விடயம் தொடர்பாக மகஜரொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.  இந்த அறிக்கை யாழிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்று  கையளிக்ப்பட்டது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், காணாமலாக்கப்பட்டமை, சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கடந்த பத்து வருடங்களாக கோரி வருகின்றோம்.

தமிழர்களின் நெஞ்சங்கள் வெடித்த நாள் இன்றாகும். தமிழினப் படுகொலையின் பத்தாவது ஆண்டில் இன்றைக்கும் தமிழ் மக்கள் நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இறுதி யுத்த இனப்படுகொலையில் 145 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். 25 ஆயிரத்திற்கும் மேலாக காணமலாக்கப்பட்டள்ளனர். இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர் சித்திரவதைகள் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பலவும் இங்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் இனப்படுகொலையொன்றை நடத்தியிருக்கின்றது. ஆகையினால் இந்தப் படுகொலை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகளைத் தண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டும்.

இதனையே கடந்த பத்து வருடங்களாக தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ அல்லது குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. இதற்கு மாறாக குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில்தான் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இன்றைக்கு பத்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் இவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இனியும் காலம் தாழ்த்தாது இந்தவிடயத்தில் ஐ.நா. உடனடியாக தலையிட்டு உண்மையைக் கண்டறிந்து நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் 145,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்களவர்களை தமிழர்கள் வெறுமனே நம்ப முடியாது. இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும் ஆண்களையும் சித்திரவதைகளைச் செய்து அடிமைத்தனமாக நடத்துகிறது.

இதற்கும் மேலாக கொடூரமான பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் இன்னும் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரச தரப்பும் அதன் படைகளும் நடத்தி வருகின்ற நிலையில், இங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

ஆகையால் இனியும் காலம் தாழ்த்தாது இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்வதற்கும் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் காணாமலாக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும். ஐ.நா. சபை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அல்லது இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்’ என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.