கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று (16) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினரால் கையளிக்கப்பட்டுள்ள அந்த பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள. அதில், 66 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
10 குற்றச்சாட்டுகள்
1. கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை இராணுவத் தளபதிக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதாக, இராணுவத் தளபதியால் 2019 மே மாதம் 5ஆம் திகதி சிலுமின பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.
2. சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட இம்சான் அஹமட் இப்ராஹிமுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, அந்த அமைச்சின் கொள்கைகளுக்கு முரணாக, துப்பாக்கி ரவைகளை விநியோகித்துள்ளார்.
3. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இராணுவ வீரர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, ஒரு வருடத்துக்கு மேலாக விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸார், வெடிப்பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கருதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், 2019.05.06ஆம் திகதி அவர்களுக்கு பிணை வழங்க ஏற்பாடுகள் செய்து, அரசியல் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளமை
4. ரிஷாட் பதியுதீன் தலைவராக விளங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொருளாளரன, எஸ்.கே.பி. அலாவுதீன் தீவிரவாதிகளின் ஆதரவாளர் தொடர்பில் உண்மை தகவல்களை அறிந்திருந்தும், அவற்றை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தாமை
5. அமைச்சருடன் நெருங்கிய தொடர்பை பேணிய அல்ஹாஜ் மொஹமட் இப்ராஹிம் யூசுப் இப்ராஹிமின் புதல்வர்கள் இருவரும் தற்கொலைக் குண்டுதாரிகளாக செயற்பட்டமை
6. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றிய அப்துல் ஹனுத் பயங்கரவாதியாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை
7. அமைச்சரின் ஆலோசகரான மௌலவியொருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை
8. அமைச்சரின் சகோதரரான ரிப்கான் பதியுதீன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை
9. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அமைச்சரால் சில அழுத்தங்கள் விடுக்கப்படுவதாக, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களுக்கமைய சமூகத்தில் எழுந்துள்ள கருத்துக்கள்
10. பயங்கரவாதிகள் மற்றும் அமைச்சருக்குமிடையில் தொடர்பு குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில், இது தொடர்பில் விசாரிக்க பொலிஸார் இதுவரை முன்வராமை.
இது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கான திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு, சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளதுடன், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, குறித்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணங்களுக்கமையவே மக்கள் விடுதலை முன்னணி தீர்மானிக்குமென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் இப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், குறித்த பிரேரணையில் கையெழுத்திட முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க எம்.பி இது தொடர்பில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து தமது கட்சியால் இதுவரை கட்சி உறுப்பினர்களை தெளிவுப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேடமாக தான் கத்தோலிக்க மக்களினதும் பேராயரரின் அறிவுரைக்கமையவும் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.