ரிசாட் பதியூதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியளிப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களையடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, தெஹிவளையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிசாட் பதியூதீன், தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இராணுவத் தளபதியின் குறித்த கூற்று தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தளபதியின் குறித்த கூற்றின் மூலம் ரிசாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளதுடன், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சாதகமான சமிஞ்சை கிடைத்துள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.