ஒரே கட்சியை சேர்ந்தவர்களே ஜனாதிபதி, பிரதமராக பதவி வகிக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

340 0

ஒரே கட்சியை சேர்ந்தவர்களே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வெவ்வேறு கட்சிகளில் இருப்பதாலேயே ஆட்சி நடத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் மக்கள் பார்வை அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இல்லாததால் ஆட்சியில் கருத்து முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆட்சி நடத்துவதால் இருவருக்கிடையில் வேறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒற்றுமையின்மை தோன்றுகின்றது. நாட்டின் அபிவிருத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இந்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கும் இவர்கள் இருவரும் வெவ்வேறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். எனவே இந்த நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திகளை அபிவிருத்தி செய்யவும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் எதிர்வரும் தேர்தல்களில் ஒரே கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என மேலும் கூறினார்.