சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம்

560 0

 

 

 

 

17 May 2019
Norway

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும்.

மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான நீதியும், இன்றும் தமிழர் தேசத்தில் நடைபெறும் கட்டமைப்புசார் இன அழிப்பிற்கும் எமக்கான பரிகாரநீதி திட்டமிட்டே மறுக்கப்பட்டு வருகின்றமை நாம் அனைவரும் ஒற்றுமையாக விடுதலையை நோக்கிய உயரிய சிந்தனையை மனதில் நிறுத்தி தொடர்ந்தும் போராடவேண்டும் என்பதையே காலம் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது.

தமிழினப்படுகொலை நடந்தேறிய/நடைபெறும் எமது தாயகத்தில் உள்ள மக்களால் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைமைகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறம்தள்ளி மக்களின் நிலையில் நின்று செயலாற்றாது, தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசின் நலன்களை சார்ந்தே செயற்பட்டு வந்ததன் விளைவு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பிரதான கோரிக்கையாக முன்னிறுத்தப்பட்டுவந்த தமிழினப்படுகொலை விவகாரம் வலுக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகளின் அரச சார்பு நிலையானது, அனைத்துலக தளத்தில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் அமைப்புகளின் வகிபாகத்தினையும் பலவீனப்படுத்தியுள்ளது.

தமிழினப் படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசை தொடர்ந்தும் காப்பாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடானது நீதிக்கான முன்னெடுப்புகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமை மூன்றாவது தடவையாக வழங்கப்பட்ட காலநீடிப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையுமே நிறைவேற்றாத நிலையில் அந்நிலையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பானது, தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது எனும் நிலைக்கு ஈழத்தமிழர்களை தள்ளியுள்ளது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது புதியதோர் தளத்திற்கு சிறிலங்கா விவகாரத்தை நெட்டித்தள்ளியுள்ளது. அதனை மையப்படுத்தியதாகவே அனைத்துலக கையாழுகையும் இனிவரும் காலங்களில் அமையப்போகும் சூழலில் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதென்பது கடும் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. சிறிலங்கா அரசியலோ, அனைத்துலக சூழமைவோ எவ்வாறு மாறினாலும் அநியாயமாக சிறிலங்கா பேரினவாத அரசால் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதியை நாம் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் என்பது எமது வரலாற்றுக் கடமை.

தமிழின அழிப்பிற்கு காலதாமதம் இன்றி உடனடியான அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வேதச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். தாயகத்தில் நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பை நோக்கிய அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு எண்ணத்துடனும் கலாசார, பாரம்பரிய, பண்பாட்டு சிதைவுகளுக்கு வித்திடும் வகையிலும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இனவழிப்பு இராணுவத்தின் இருப்பின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் விரைந்து தீர்வுகாணப்பட வேண்டும்.இன அழிப்பிற்கு உள்ளாகிய ஒரு தேசிய இனம் எனும் வகையில் , ஈழத்தமிழர்கள் தமது அரசியல் வேணவாவை தாமே நிர்ணயிற்கும் முகமாக தாயகத்திலும் , உலகப்பரப்பில் சிதறி புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஐநாவின் கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட
வேண்டும்.

இவ்வாறு அனைத்து பிரச்சினைகளும் பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாது திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதுவும் தமிழர்களது அரசியல் பிரதிநிதிகளாக திகழ்ந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களது ஆதரவுடனே இந்நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை தமிழர் தரப்பின் போராட்டங்களை பயனற்றதாக்கி வருகின்றது. ஆகவே, தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கியதான அரசியல் தீர்வை நோக்கியதாக தாயகத் தமிழர்களும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் ஓரணியில் இணைய வேண்டியது அவசியமாகின்றது.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டடம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட நிலையில் எமது மாவீரர்களின் அதி உச்ச தியாகத்தாலும் , சிங்கள பேரினவாத அரசு எமது மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகளாலும் எமது விடுதலைக்கான நகர்வுகள் சர்வதேசமயமாகப்பட்டு நிலவுகின்ற இத் தருணத்தில் “நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.” எனும் கோசத்துடன் விடுதலையை நோக்கி விரைந்துசெல்வோம்.

அடக்கி ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வரும் நாம் ‘ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்’ என்ற தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என தமிழ்த் தேசிய பேரினமாக அணிதிரழ்வோம் என முள்ளிவாய்க்காலில் மூச்சடக்கப்பட்ட இந்நாளில் எமது மாவீரர்களையும் மக்களையும் மனதில் நிறுத்தி உறுதியேற்றுக்கொள்வோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!