உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை தான் விடுவிக்குமாறு கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு கோரி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனக்கு 3 தடவைகள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று அனுப்பி வைத்துள்ள குரல் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கைது செய்யப்பட்டதாக இராணுவ தளபதி கூறும் சந்தேகநபரின் தந்தை, தனது மகனான குறித்த சந்தேகநபர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக கேட்டறிந்து கூறுமாறு வினவினார்.
இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக வினவினேன். எனினும் அவர்கள் சரியான தகவல்களை வழங்கவில்லை. இதனையடுத்து நான் இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயகவிற்கு தொடர்புகொண்டு குறித்த சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக மாத்திரமே வினவினேன். அவரை விடுதலை செய்யுமாறு நான் ஒருபோதும் கூறவில்லை. அதற்கான குரல் பதிவுகள் என்னிடம் உள்ளன.
மேலும் நீர்கொழும்பில் உயிரிழந்தவர்களின் அஞ்சலி நிகழ்வின்போது பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி மற்றுமொரு தடவை அவருக்கு அழைப்பை ஏற்படுத்திதேன். இது தவிற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்குமாறு நான் ஒருபோதும் கோரவில்லை” என தெரிவித்துள்ளார்.