உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளை – மாபோல பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் ரிஸ்வான் எனும் நபரே மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ். மற்றும் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகளுடன் மிக நெருங்கிய தொடர்பினை பேணிய நபர் ஒருவர் தொடர்பில் மேல் மாகாண உளவுத்துறைக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த உளவுத்துறையினர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து வத்தளையில் விஷேட நடவடிக்கையை நேற்று முன் தினம் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு மாபோல – வத்தளை பகுதியில் இரு சொகுசு வீடுகள் உள்ளதாகவும் அதில் அவரது இரு மனைவிமாரும் பிள்ளைகளும் வசிப்பதாகவும் பொலிசார் கூறினர். குறித்த இரு வீடுகளிலும் மேல் மாடியில் நீச்சல் தடாகங்கள் இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சந்தேக நபரைக் கைது செய்யும் போது அவரிடமிருந்து ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இதுவரை அடையாளம் காணப்படாத கைத்துப்பாக்கி ஒன்றும் , 5 கடவுச் சீட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டின் பின்னர் சந்தேக நபர் திடீரென பணக்காரரானதாகவும் கூறப்படும் நிலையில், அது தொடர்பிலும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் உள்ள தொடர்பு குறித்தும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.