சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள் வந்தார். அங்கிருந்த சசிகலாவிடம் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று 23-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரும்பி சென்றது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்தனர்.
2-வது நாளாக நேற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். காலை 10.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த எய்ம்ஸ் டாக்டர்கள் மதியம் 12.35 மணி வரை அங்கிருந்தனர். பின்னர், காரில் வெளியே சென்ற அவர்கள் மீண்டும் மாலை 5.15 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் நேற்று இரவு சென்னை வந்தார். அவரும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவுடன் இணைந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். இவர்கள் அனைவரும் இன்னும் ஒரு சில நாட்கள் சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சையை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
சிகிச்சை ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வந்தார். அங்கிருந்த சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவரிடம் சசிகலா, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவருவதாக தெரிவித்தார். அதன்பின்னர், ராஜாத்தி அம்மாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நேற்று தமிழக முன்னாள் கவர்னர் கே.ரோசய்யா, கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரமேஷ் சென்னிதலா, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.