வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர்.
வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண அலுவலகத்தின் ஊடாக அவர்கள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளருக்கு அனுப்பி வைக்கவுள்ள மனுவின் உள்ளடக்கத்தை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினர்.
குறித்த மனுவில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மையைச் சொல்லுவதில் அரசாங்கம் உறுதியாக இல்லை எனவும், தமிழர்களை கொலை செய்யும் அல்லது கொடுமைப்படுத்தும் எந்த குற்றவாளிகளுக்கும், அரசாங்கம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.வை அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியா மாவட்ட உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம், இன்றுடன் 817ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.