இலங்கையில் பாதுகாப்பு படையினரின் கண் முன்னால் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சூறையாடப்பட்டுள்ளன. முகநூல் பதிவு காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக மூண்ட கலவரம் காரணமாக உயிரிழப்புகளும் காயங்களும் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களை தடை செய்துள்ளது.
காடையர் கும்பல்கள் பள்ளிவாசல்களை தேடி தேடி தாக்கியுள்ளன. முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் எதிர்விளைவாகவே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. திலாரா (பெயர் அவரது பாதுகாப்புக்காக மாற்றப்பட்டுள்ளது) தனது கணவரின் வர்த்தக நிலையத்தை 500 பேர் கொண்ட கும்பலொன்று தாக்கியது என தெரிவித்தார்.
அவர்கள் எங்கள் வர்த்தக நிலையங்கள் மீது கற்களை வீசி எறிந்தனர். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றனர் என தெரிவித்த அவர் தனது கணவரும் மூன்று ஊழியர்களும் அச்சம் காரணமாக உள்ளே பதுங்கியிருந்தவேளை இது இடம்பெற்றது எனவும் தெரிவித்தார்.
அவர்கள் மூர்க்கத்தனத்துடன் வந்து கற்களை வீசி எறியத்தொடங்கினார்கள். எனது கணவர் தலையில் கற்கள் படுவதை தவிர்ப்பதற்காக கடும் போராட்டத்தில் ஈடுபட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் வர்த்தக நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததும் எனது கணவரையும் மூன்று ஊழியர்களையும் தாக்கத் தொடங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் அவரது கணவரை வெளியே இழுத்துச் சென்றவர்கள் கடுமையாக தாக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் அதிர்ஷ்டவசமாக அவ்வேளை அந்த இடத்துக்கு இராணுவத்தினர் ஜீப்பில் வந்தனர். அவர்கள் அந்த கும்பலை துரத்திவிட்டனர் என்கின்றார் டிலாரா. வேடிக்கை பார்த்த படையினர்
இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்றவேளை அருகில் இரண்டு மூன்று டிரக்குகளில் இராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் வன்முறையை தடுப்பதற்காக எந்த முயற்சியையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
வன்முறை வெறியாட்டம் காரணமாக எங்களுக்கு 20 மில்லியனுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். கிராமம் கிராமமாக சென்று தாக்கினர்
குருநாகலில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கிராமம் கிராமமாக சென்று தாக்குதலை மேற்கொண்டனர் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த வேளையிலும் குருநாகலில் அவர்கள் கிராமம் கிராமமாக செல்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு கண்ணீர் புகைபிரயோகத்தை கூட மேற்கொள்ளவில்லை என தரிசா என்பவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரிகள் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
மினுவாங்கொடையில் 500 பேருக்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான டயமன்ட் பாஸ்டா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தாக்கி அதனை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். குறிப்பிட்ட நிறுவனம் எரிந்துகொண்டிருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வன்முறையில் ஈடுபட்ட ஆறு பேரை பொலிஸார் கைது செய்தனர். எனினும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அந்த இடத்துக்கு வந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தங்களை கொடுத்தார்.
அவரின் இந்த செயல் வன்முறையில் ஈடுபடுவதற்கான துணிச்சலை ஏனையவர்களுக்கு வழங்கியது. பள்ளிவாசலொன்றில் தேடுதலை நடத்துவதற்காக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பௌத்த மதகுருமார் கள் அணிதிரட்டினர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது வீடு தாக்கப்பட்ட சம்பவத்தை டுவிட்டரில் வர்ணித்த ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காடையர் கும்பல் கதவை உடைத்து திறந்துகொண்டு எனது வீட்டுக்குள் நுழைந்தது. நாங்கள் எங்கள் பெற்றோருடன் வசிக்கும் இந்த புதிய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அவர்கள் உடைத்து நொருக்கினார்கள். கடந்த மாதம் சிறுநீரக சத்திர சிகிச்சை செய்துகொண்ட எனது தந்தை நடக்கமுடியாதவர். இதனால் நாங்கள் தப்பியோட முயலவில்லை என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது பதில் தாக்குதல்களை மேற்கொள்ள முயல வேண்டாம் என முஸ்லிம்கள் தங்கள் சமூகத்தவர்களை கேட்டுக்கொள்ளும் செய்திகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
நாங்கள் கடந்த காலத்திலும் அமைதியாயிருந்தோம், தற்போதும் அமைதியாகவுள்ளோம், எதிர்காலத்திலும் அமைதியாகயிருப்போம் என சம்மாஸ் கூஸ் என்பவர் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இது கோழைத்தனமல்ல இது அதிகபட்ட துணிச்சல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன என நான் கவலைப்படவில்லை. அவற்றை மீளக் கட்டியெழுப்பலாம். நான் மக்கள் குறித்து கவலையடைகின்றேன் என பர்ஹான் நிஜாம்தீன் என்பவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போன்ற சிலர் 1983 இனக்கலவரத் தின் போது தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து எச்சரித்துள்ளனர்.
1983 ஆம் ஆண்டு நிலமை மீண்டும் உருவாகாததை உறுதி செய்ய வேண்டியது அனைவரினதும் கடமை என அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து டீஆர்டி வேர்ல்டிற்கு கருத்து தெரிவித்த தனது பெயரை குறிப்பிட விரும்பாத பொறியியல் மாணவர் ஒருவர் பழிவாங்கும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டார்.
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது காடையர்கள் தாக்குதலை மேற்கொள் வது இது முதல் தடவையல்ல. அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்காதவரை இது தொடரும் என அவர் தெரிவித்தார்.
வழமை போன்று இம்முறையும் அரசாங்கம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அனுமதிக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். இது துயரமா னது என அவர் தெரிவித்தார்.