வடமேல் மாகாணத்தின் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில், விசாரணை ஆணைக்குழு அல்லது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து, முழுமையான விசாரணைகள் முன்னெடுக்குமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கம் நிலையானதொரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கண்டி- திகனையில் இன்று (16) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
கடந்த 13ஆம் திகதி இரவும் அதன்பின்னரும், குருநாகல், புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில், முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என்று தெரிவித்ததுடன், பொல்லுகளுடன் களமிறங்கியவர்கள், முஸ்லிம் மக்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் அடித்து நொறுக்கி, கோரத்தாண்டவமாடினர் என்றும் சாடினார்.
மேலும் கூறிய அவர், ஒரே தடவையில் வன்முறையாளர்கள் அணி திரண்டது எப்படி? ஒரே மாதிரியான பொல்லுகள் எங்கிருந்து வழங்கப்பட்டன? சட்டம், ஒழுங்கை கையிலெடுப்பதற்கு, எப்படி துணிவு வந்தது? இவற்றை ஒப்பிட்டு, ஆராய்ந்துப் பார்த்தால், இதன் பின்னணியிலும் பலம் பொருந்திய அரசியல் கரங்கள் இருப்பதாகவே சந்தேகம் எழுகின்றது. எனவே, விசாரணை ஆணைக்குழு அல்லது நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, இவை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.