பா.ஜனதாவின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது – வைகோ கண்டனம்

355 0

சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சியின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது என வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ந்தேதி பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியின்போது, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், கொல்கத்தா பல்கலைக் கழகம், மற்றும் வித்யா சாகர் கல்லூரி அருகில் முழக்கங்களை எழுப்பினர்.

இதனை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் மோதல் உருவானது.

வித்யாசாகர் கல்லூரிக்கு உள்ளே நுழைந்த பா.ஜ.க. குண்டர்கள், வங்கத்து மக்கள் போற்றி வணங்கி வரும் சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகச் சிறப்புகளைப் பெற்று, வங்க மறு மலர்ச்சிக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கின்றனர்.

மேற்கு வங்க மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையாகவும் முதல்வர் பொறுப்பை ஏற்ற மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா இருவரும் துடிக்கிறார்கள்.எனவேதான், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் அத்துமீறல் பேச்சுக்கள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து திரும்பத் திரும்ப முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாராளுமன்றத் தேர்தலின் கடைசி 7-வது கட்டத்தில் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு 19 -ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது. இத்தேர்தல் பரப்புரை 17 ஆம் தேதிதான் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் கொல்கத்தா வன்முறையைக் காரணம் காட்டி, அங்கு நிலவும் சூழல் காரணமாக தேர்தல் பரப்புரையை ஒரு நாள் முன்னதாக இன்று முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் சதிகார செயலாகும்.

மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே இருந்தன.

நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் மதவாத அரசியல், ராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தொடர்ந்து பேசினர்.

தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 15-ந்தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, அவர்களின் பேச்சுக்களை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, இருவர் பேச்சிலும் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் சான்று அளித்தது வெட்கக்கேடான நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.