குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்த நகரபிதா கௌதமன்!

287 0

வடமாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகரசபையில் வாகனப்பற்றாக்குறை நிலவுவதாகத்  தெரிவித்து நகரபிதா இ.கௌதமன் அவரது வீட்டிலிருந்து  குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்து இன்றையதினம் நகரசபை அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த நகரபிதா,

வடமாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாக நகரசபைக்கு வாகனங்கள் தேவை என்று உரியத் திணைக்களங்களிற்கு தெரியப்படுத்தி வருகிறோம். அவர்கள் இது தொடர்பாகக் கரிசனை கொள்கிறார்கள் இல்லை. நாம் அவர்களின் சொந்த பணத்தில் வாகனம் கேட்கவில்லை எமது சபையிடம் உள்ள நிதியில் வாகனம் வாங்குவதற்கான அனுமதியையே கோருகிறோம் அதனைக் கூட அவர்கள் தருகிறார்கள் இல்லை.

வவுனியா என்றால் வெறுமனே அகதி முகாம்களிற்காக உருவாக்கப்பட்ட மாவட்டமாகவே அனைவரும் நினைக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும், வவுனியாவில் இருப்பவர்கள் தீண்ட தகாதவர்களாகவுமே வடமாகாண அதிகாரிகள் பார்க்கிறார்கள். நகரசபையை மாநகரசபையாக தரமுயர்த்தக்கூடிய நிலை இருந்தும் அது அவர்களாலேயே தடைப்படுகின்றது.

மக்களின் தேவைகளிற்காகவும் வருமானத்தை அதிகரிப்பதற்குமாகவே நாம் இந்த தேவைகளைக் கோருகிறோம். இதனால்  மக்களுக்குச் செய்ய வேண்டிய பல சேவைகள் தடைப்பட்டு வருகின்றது. தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதிகமாகப் பழுதடைந்து வருவதுடன் அதனைத் திருத்துவதற்காகப் பயன்படுத்திய நிதியில் புதிய வாகனத்தையே கொள்வனவு செய்திருக்க முடியும். எனவே உரியத் தரப்புகள் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தர முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இதேவேளைக் கலந்துரையாடல் ஒன்றிற்காக வடமாகாண ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதில் பங்கெடுப்பதற்காக நகரபிதாவிற்கு பதிலாக உபநகரபிதா சு.குமாரசாமி  குறித்த கூட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் அவர் பயணித்த வாகனம் பழுதடைந்து நின்றுள்ளது. இதனால் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் அதனைத் திருத்துவதற்கும் பல்வேறு நடைமுறைகள் இருப்பதனால் அதனை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் நிறுத்திவிட்டு உபநகரபிதாவும்,சாரதியும் பேருந்தில் ஏறி மீண்டும் வவுனியாவை வந்தடைந்திருந்தனர்.

வாகனம் மற்றும் ஆளணி பற்றாக்குறை காரணமாக கடந்த வருடமும் நகரபிதா குப்பை அகற்றும் உழவியந்திரத்தில் பயணம் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடமாகாணத்தின் முக்கிய உள்ளூராட்சி சபையாகக் காணப்படும் வவுனியா நகரசபைக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாமையிட்டு பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.