ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது – அன்புமணி ராமதாஸ்

353 0

ராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் கந்தம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதலமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதில் அரசு சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.

அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.

1½ மாத காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை (ராமதாஸ்), முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.

ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்றார் ஸ்டாலின். ஆனால் ராகுலே அதனை ஏற்கவில்லை. பின்னர் மேற்கு வங்கம் சென்ற அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை சொல்வோம் என பேச்சை மாற்றிவிட்டார். இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.

இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார்.

நீட் தேர்வை ரத்து செய்வேன் என அவர் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியின் இருந்த நேரத்தில்தான் அனுமதிக்கப்பட்டது. காவிரியில் டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தி.மு.க. ஆனால் அதை எதிர்த்து ஸ்டாலின் போராடுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது கருணாநிதி. அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்து போட்டது அன்றைய தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின்.

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார். இலங்கையில் சிங்கள வெறியர்கள் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அந்த வெறியர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும், இலங்கை பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலீடு செய்திருக்கிறார். ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை?. இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.