ரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள் என்று ஈஸ்வரன் பேசியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேலாயுதம் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே இலவச மின்சாரத்தை வழங்கி விவசாயத்தையும். அதேபோல் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இதன் மூலம் அதிக பயன் அடைந்தவர்கள் கொங்கு நாட்டு விவசாயிகள் தான்.
அதேபோல் இந்த தேர்தலிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாகவும். நிலமற்ற ஏழைத்தொழிலாளர்கள் வாங்கியுள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடனையும் தள்ளுபடி செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிக்கு தான் விளை வித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இடைத் தரகர்கள் பயன் பெறும் நிலை இருந்தது. அதை மாற்றுவதற்காக கருணாநிதி உழவர் சந்தை கொண்டு வந்தார். அவை மீண்டும் சரியாக செயல்பட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.
இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்திய தி.மு.க., கொங்கு நாட்டில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை இனி மாற்றிக் காட்டுவோம். செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய், சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் குறைப்பு, கடன் தள்ளுபடி என்று தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பம் பயன்பெற உள்ளது. எனவேரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.