பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷிய அதிபரின் சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக கோவாவில் தரை இறங்குவதில் 9 மணி நேரம் தாமதமானது.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தருகிறார். இன்று அதிகாலை 1 மணியளவில் பானஜியில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹன்சா தளத்தில் அவரது விமானம் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், கடற்கரை நகரமான கோவாவில் கடுமையான பனி மூட்டம் நிலவியது.
இதனால், புதின் வந்த சிறப்பு விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது விமானம் 3 மணிக்கு தரையிறங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் பனிமூட்டம் இருந்ததால் பின்னர் 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரஷிய அதிபர் வருகையையொட்டி ஐ.என்.எஸ் ஹன்சா தளம் முதல் அவர் தங்கும் ஓட்டல் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து, இன்று காலை 10.20 மணியளவில் ரஷிய அதிபரின் விமானம் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா தளத்தில் தரையிறங்கியது. வெளியுறவுத்துறை இணைமந்திரி வி.கே.சிங், கோவா துணை முதல் மந்திரி பிரான்சிஸ் டி’சோசா ஆகியோர் அவரை வரவேற்று அழைத்து சென்றனர்.
இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்த புதின் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.