வடமேல் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தி அதனூடாக சர்வாதிகார ஆட்சியினை கொண்டு செல்லும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுதாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகள் 90 சதவீதம் முழுமையடைந்துள்ளது.
வடமேல் மாகாணத்தின் வன்முறை தொடர்பிலும் முக்கியமான தரப்பினர் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம் பொலிஸ் தரப்பினர் மீதும் ஒரு சில விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டு மக்கள் இந்த நெருக்கடியான நிலையில் முறையான தீர்மானங்களை பொறுமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.