பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும் – சந்திரிகா

334 0

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என நல்லிணக்க செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  ஒளிப்படமும் மாவீரர்களின் ஒளிப்படங்களும் இருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாணவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தமிழ் அரசியல்வாதிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரும் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் ஒளிப்படங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டிருந்தன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, சட்டமா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முதுகெலும்பாக யாழ். பல்கலைக்கழகம் விளங்குகின்றது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாழ். பல்கலைக்கழத்தில் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், அப்பாவி மாணவர்களைக் கைதுசெய்து தடுத்துவைப்பது அந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும்” என மேலும் தெரிவித்துள்ளார்.