வடக்கு மாகாணசபை அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு!

316 0

tna-1வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவராக இருந்த அன்ரனி ஜெகநாதன் கடந்த முதலாம் திகதி மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது பதவி வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையில் புதிய அவைத் தலைவர் யார் என்பது தொடர்பிலும், அடுத்த அவைத் தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 மாகாணசபை உறுப்பினர்களில் புதிய அவைத்தலைவர் யார் என்பதிலும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

வடக்கு மாகாண சபை அமைச்சர்களில் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சுப் பதவி எவருக்கும் வழங்கப்படாததால் பிரதி அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அப்பதவிக்கு அன்ரனி ஜெகநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது மரணமடைந்துள்ளதால் அவரது பதவிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை நியமிக்குமாறு குரல்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்று பிரதி அவைத் தலைவர் பதவி தமக்கு வழங்கவேண்டுமெனக் கோரி வருவதால் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் வலுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.