ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரிமாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள விசேட நடவடிக்கை பிரிவு ஆகியவற்றில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றன.
இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல, அனுக்கன, கொட்டம்பிட்டிய, குளியாப்பிட்டிய, மடிகே, நிக்கவரெட்டிய, நாத்தாண்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
உடனடியாக பிரதமருடன் தொடர்புகொண்டு, எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலரிமாளிகையில் கலந்துரையாடினோம். பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் கூட்டுத் தலைமை பொறுப்பதிகாரி ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அசம்பாவிதங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவம் மற்றும் முப்படை வீரர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கும் அவசரகால சட்டத்தின் பிரகாரம் கலகக்காரர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன. அத்துடன் அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ட இடங்களில் சுடுகலங்களை பாவிப்பதற்கு உத்தரவு வழங்குமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
இதன்பின்னர், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடவடிக்கை அறையில் உயர்மட்ட பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு பதில் அமைச்சர் ருவன் விஜயவர்தன, அமைச்சர்களான நளின் பண்டார, அகிலவிராஜ் காரியவசம், மலிக் சமரவிக்கிரம, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் கூட்டுத் தலைமை பொறுப்பதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பல இடங்களிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை திரட்டி, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்த அசம்பாவிதங்கள் வேறு பகுதிகளுக்கும் பரவுவதற்கான சாத்தியங்கள் தென்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறினோம்.
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது கடுமையான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினோம் என அமைச்சர் குறிப்பிட்டார்.