நல்லாட்சி எனச் சொல்லிக்கொள்ளம் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றனர். இதையேதான் முன்னர் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்ஷவும் செய்தார் என சிவில் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) மருதானை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட மேற்கண்டவாநு தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்காவின் ஆட்சியாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன செய்வதையே முன்னர் மகிந்த ராஜபக்ஷவும் செய்தார். அப்படியிருக்கும்போது இருவருக்கும் என்ன வேறுபாடு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த ஆட்சியில் சுயாதீன அமைப்புகளில் முழுமையான அரசியல் தலையீட்டை ஏற்படுத்தி நாட்டின் சுயாதீனத்தை முழுமையாக சீரழித்தார். அவரது விசுவாசிகளுக்கு மாத்திரமே அவரது ஆட்சி சாதமாக அமைந்தது.
அத்துடன் அவர் இராணுவ அதிகாரிகளைப் பாதுகாத்து வந்தார். அதையே இப்போது மைத்திரிபால சிறிசேனவும் செய்கின்றார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என மக்களுக்கு கூறிவிட்டு, தற்போது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.