மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.

798 0

மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத –
தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.

மாபெரும் இனப்படுகொலை ஞாபகம் வராத –
ஒரு தமிழனையும் அடையாளப் படுத்த முடியாது.

மன்னிக்க தான் முடியுமா – உலகெங்கும் வாழும் தமிழரின் கூக்குரலுக்கு செவிசாய்க்க மறுத்து பல்லாயிரக்கனக்கான மக்களின் சாவை தங்களின் மௌனத்தில் எற்றுக் கொண்ட உலக நாடுகளை ?

மறுக்க தான் முடியுமா – அன்று முதல் இன்று வரை தொடரும்- துயர்,கோபம், ஏமாற்றம் போன்ற ஈழத் தமிழரின் உணர்ச்சிகளை?

மறக்க தான் முடியுமா – கொத்து கொத்தாய் எம் உறவுகள் உலகின் கண்முன் தலைமுறை தலைமுறையாக சாய்க்கப்பட்ட காட்சிகளை?

அல்லது நிலத்தில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடி கடலிலும் காற்றிலும் கலந்து இன்றும் எமக்கு சேதி சொல்லும் எம் தேசத்தின் இரத்தம் படிந்த பாகங்களை?

மனம் ஏற்றுக் கொள்ளுமா பதுங்குகுழியில் கதறி அழுதுமயங்கிய பச்சிளம் பாலகர்கள் உயிரோடு புதைக்கப்பட்டதை?

மண்காத்த மாவீரரின் உயிரினும் மேலான மானத்தை – ஆண் பெண் என்னும் வேறுபாடு இன்றி கற்பை, உறுப்பை சூறையாடி வெட்டி எடுத்தை ?

அல்ல உடம்பில் உயிர் இருக்கத்தக்கதாக உடல்கள் கருகியதை ??அதுக்குமேல் இன்னும் மலராத பிஞ்சுகளை கசக்கி எறிந்து விட்டதை ?

முள்ளிவாய்க்கால் முடிவல்ல – ஆரம்பம் என்று சொன்னோம்.
ஆனால் இன்று சொல்லி 10 ஆண்டுகள் .. இதுவரை எதை நாம் கண்டோம்?

மறக்க முடியுமா மறப்போமா என்றெல்லாம் கதறினோம்.
ஆனால் இன்று அதை மறந்து சிரித்து நாமும் நம் பாடுமாய் எதார்த்த சூழலில் வாழ்கின்றோம்.

தமிழா உன் அடுத்த சந்ததியினருக்கு தாய்மொழி தமிழை கற்பிப்பது போல – நம் தாயகம் தமிழீழம் என்றும் கற்றுக்கொடு.

தமிழீழத்தின் தேசியக்கொடியை நீ தூக்கி பிடிப்பது போல – வளரும் குமுகாயத்துக்கு மானம் காத்தார்கள் புலிவீரர் என்று
உரக்கச் சொல்லிச் சொல்லிக் கொடு.

நச்சுக்குண்டாலும் ரசாயன குண்டுகளாலும் நம் தேசத்தின் சொந்தங்களை ஈவு இரக்கமின்றி வயது பாராமல் கொன்றான் என்று கற்றுக் கொடு.

கலாச்சாரம் பண்பாடு கலைகளை தேடி தேடி கற்பிப்பது போல- முக்கியமாக உன் பிள்ளைகளுக்கு வரலாற்றையும் ஒற்றுமையையும் சொல்லி கொடு.

புலத்திலும் களத்திலும் உலக நாடுகளை நம் ஒற்றுமையால் அதிர வைத்தோம். 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன… மறுபடியும் உலகை நம் ஒற்றுமையால் திரும்பிப் பார்க்க வைப்போம்.

வா தோழா வா! இனப்படுகொலைக்கு நீதி கோரி. வாருங்கள் தோழர்களே இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த ஒன்று கூடி வாருங்கள் உறவுகளே!

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி