கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்-ராஜபக்ஸ

273 0
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையுடனும், சிந்தித்தும் செயற்பட வேண்டும் என நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதியன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, தாய்நாடு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரசாங்க புலனாய்வுதுறையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து உரிய அவதானம் செலுத்தாமை ஆகிய விடயங்களினாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்குகூட அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினால் கிறிஸ்தவ மக்களுக்கு தமது வழிபாட்டு தலங்கள் இல்லாது போயுள்ளதாகவும், பௌத்த மக்களுக்கு தமது வெசாக் பூரணை தினம் இல்லாது போயுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தொழில்புரியும் தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பமும் இல்லாது போயுள்ளதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால யுத்தத்தின் போதுகூட இலங்கை இவ்வாறான நிலைமையை எதிர்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபஸ நினைவூட்டினார்.

உலகிலேயே மிகவும் பலம் பொருந்திய தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிக் கொண்ட தமக்கு, இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவது பாரிய சவாலாக அமையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அனைவரும் மிகவும் பொறுமையுடனும், சிந்தித்தும் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபஸ விசேட அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.