சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையாக ரெட்டை ஏரியில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரங்களாக திகழும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. இதன் காரணமாக நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தால், அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வாரியம் இறங்கி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிகரன், நிருபரிடம் கூறியதாவது:-
பூண்டி ஏரியில் 143 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 45 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் மூலம் இந்த மாதம் 31-ந்தேதி வரை தினசரி 55 மில்லியன் லிட்டரும், அதன் பின்னர் ஜூலை 10-ந்தேதி வரை 20 மில்லியன் லிட்டரும் தண்ணீர் வினியோகம் செய்ய முடியும்.
மீஞ்சூர், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்றாடம் 180 மில்லியன் லிட்டர் தண்ணீரும், வீராணம் ஏரி மற்றும் நெய்வேலி நீர்ப்படுகையில் இருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீரும் எடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 316 விவசாய கிணறுகள் மூலம் தினசரி 95 மில்லியன் லிட்டர் தண்ணீரும், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
ஜூன் மாதம் இறுதி வரையில் கல்குவாரி தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க கைக் கொடுக்கும். அதன்பின்னர் எருமையூர் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
சென்னை ரெட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய ஏரி தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை என்பது சோதனையில் தெரிய வந்தது. எனவே இதில் முதல்கட்டமாக ரெட்டை ஏரியில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் எடுக்கப்படும். அங்கிருந்து அன்றாடம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படும்.
மாகரல், கீழானூரில் 13 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஆழ்துளை கிணறுகளில் விசை குழாய் பொருத்தப்பட்டு 6.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
குடிநீர் வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், சென்னை நகரம் குடிநீர் பஞ்சத்தில் சிக்காது.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் போராடி வருகிறது. அதிகாரிகள், பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
கார்கள் கழுவுதல், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சல், வீட்டு முன்பு கோலம் போடுதல் போன்றவற்றிற்கு குடிநீர் வாரியத்தின் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். ‘ஷவர்’ மூலம் குளிப்பதை தவிர்த்துவிட்டு, வாளி மூலம் குளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.