ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 67 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது விதிமீறல். காவிரி டெல்டா மாவட்டங்கள் ஏற்கனவே விவசாயத்துக்கு நீரின்றி வறட்சி, குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றன.
வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் தத்தளிக்கும்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தருவதா?
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு இத்திட்டத்தை நிறுத்த வேண்டும்.
பதவியிழந்து வீட்டுக்குப்போகும் நேரத்தில் பாஜக அரசும், அதிமுக அரசும் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மத்தியில் புதிய அரசு அமையும் வரை ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட அளித்த அனுமதியை நிறுத்திவைக்க வேண்டும். காவிரி டெல்டா மண்டலம் பாலைவனமாவதை தடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.