நவம்பர் மாதம் 1 ஆம் திகதி கேப்பாபிலவு மக்களை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்திப்பார்

352 0

kepapilavu_8-copyமுல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி கேப்பாபிலவு மக்களை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்திப்பார் என வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.

கேப்பாபிலவு, சூரிபுரம், குலக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் 259 குடும்பங்களை சேர்ந்த மக்கள் போருக்கு பின்னரான காலப்பகுதிகளில் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாது தற்காலிகமாக பல்வேறு பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த மக்களின் சொந்த நிலங்களை அரச படையினர் அபகரித்து தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் தமது சொந்த கிராமத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்கள் கடந்த மாச் மாதம் 24 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்திய வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கேப்பாபிலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் உடனடியாக நிபுணர் குழு ஒன்றை நியமித்து ஆராயப்படும் என உறுதியளித்திருந்தார்.

முதலமைச்சரின் வேண்டுகோலுக்கு அமைவாக கேப்பாபிலவு மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட நிலையில், ஓய்வு பெற்ற அரச உத்தியோகஸ்தர்கள் தலைமையில் குழு ஒன்றை நியமித்து கடந்த ஏப்ரல் மாதம் குறித்த குழுவினரால் முதலமைச்சருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் கேட்ட கால அவகாசம் நிறை வடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கேப்பாபிலவு மக்கள், ஜனநாயக வழியிலான கவனயீர்ப்பு போராட்டங்களை மீண்டும் நடத்துவதற்கு முயற்சித்த நிலையில், எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தனின் வாக்குறுதிக்கு அமைவாக அந்த போராட்டமும் மீண்டுமொருமுறை கைவிடப்பட்டது.

எனினும் முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி சந்திக்கவுள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களையும் பார்வையிடுவார் என வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.