நாடாளுமன்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து சென்றார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இவற்றில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. இதற்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது.
இந்த தேர்தலில் அரியானாவின் குருகிராம் பகுதியில் அமைந்த வாக்கு மையம் ஒன்றிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி காலையிலேயே வந்து வரிசையில் நின்றார். வழக்கம்போல் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அணியும் பனியன் மற்றும் காலணிகள் அணிந்திருந்த அவர் தனது வாக்கை பதிவு செய்து சென்றார்.
மத்திய பிரதேசத்தில் போபால் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங் வாக்களித்து உள்ளார். இதேபோன்று பா.ஜ.க.வின் கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டெல்லியில் உள்ள பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் உள்ள வாக்கு மையம் ஒன்றில் வாக்கு செலுத்தினார்.
உத்தர பிரதேசத்தின் மந்திரி சித்தார்த் நாத் சிங் தனது வாக்கை செலுத்தினார். டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி மற்றும் வடகிழக்கு டெல்லியின் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் நிஜாமுதீன் (கிழக்கு) பகுதியில் வாக்களித்துள்ளார். இந்த தேர்தலில் முதன்முறையாக ஓட்டளிக்கும் வாக்காளர்களும் வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு பதிவு செய்து வருகின்றனர்.