இஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டாவது சுற்றுத் தாக்குதலொன்றை நடத்துகின்ற ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்புப்படைகள் நிர்மூலம் செய்துவிட்டதாகவும் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமிய அரசு இயக்கத்துடன் இலங்கைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்குத் தொடர்பிருந்ததை விசாரணையாளர்கள் நிறுவியுள்ளார்கள்.
ஆனால் அந்தத் தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானவை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிகாரிகள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரையில் விசாரணைகள் பல மட்டங்களுக்கு அப்பால் செல்வதாக இல்லை. அதனால் நாம் அஞ்ச வேண்டியதில்லை. தீவிரவாதிகளின் இரண்டாவது சுற்றுத் தாக்குதலுக்கான எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் வழமைநிலை கொண்டுவரப்பட்டுள்ளதாக சேனாநாயக்க ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்குக் கூறியிருக்கிறார்.
இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு சர்வதேச ரீதியான தொடர்பொன்று இருக்கிறது. அத்தொடர்பை நாம் இப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
நிச்சயமாக இஸ்லாமிய அரசு இயக்கத் தொடர்பொன்று இருக்கிறது. ஆனால் நேரடியாகவே இஸ்லாமிய அரசு நடத்திய தாக்குதலென்று இது அர்த்தப்படாது. எமது (இராணுவத்தின்) நடவடிக்கைகளைத் திட்டமிடும் முகமாக இந்தத் தொடர்புகள் எந்தளவிற்கு ஆழமானவை என்பதைக் கண்டறிவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம் என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.
அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம். சர்வதேச பொலிஸார் உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த விசாரணையாளர்கள் வந்து எமக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்கால அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்காக தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் உட்பட உயர்தர இராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கி உதவுவதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை முன்வந்திருக்கின்றன என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.