சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியரை நானே கொலைசெய்தேன் எனக் கூறிவிட்டு புலனாய்வு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

355 0

download-28சண்டேலீடர் பத்திரிகையாசிரியரை தானே கொலை செய்ததாக ஓய்வுபெற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 52 வயதான குறித்த முன்னாள் அதிகாரி, கேகாலை கரந்துபன பகுதியிலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கேகாலை கேகாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிகாரி தனது வீட்டின் சமயலையில் நைலோன் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரி மிலிந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும், தனது கடிதத்தை புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்குமாறும் குறித்த முன்னாள் புலனாய்வு அதிகாரி தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த முன்னாள் புலனாய்வு அதிகாரியின் உடல் கேகாலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தவேளை, இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.