பாதுகாப்பை பலப்படுத்தினால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவும், மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்புமாறும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது இடங்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்கின்றார்கள். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் தனிப்பட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான வழிமுறைகள் எதனையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
பாராளுமன்றத்தில் பயனற்ற கருத்துக்களை பேசுவதை விடுத்து புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது அவரது அரசியல் நோக்கங்களை வெளிப்படுத்துகின்றது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்குவதால் யாருக்கு பயன்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் முழுமையாக நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதகமாக அமையும். அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படும் போதும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது மக்கள் தமது உரிமைகளை பாதுகாக்க போராட்டங்களை முன்னெடுக்க முடியாது.
போராட்டங்கள் முன்னெடுக்கும் போது அரச சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் விளைவிக்கப்பட்டால் அவை பயங்கரவாத செயற்பாடாக கருதப்பட்டு 20 வருடகாலம் சிறை தண்டனை பெறும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இவ்வாறான ஏற்பாடுகள் காணப்படுகின்ற ஒரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எமது நாட்டுக்கு தேவைதானா. இச்சட்டத்தில் முரண்பாடுகள் காணப்படாவிடின் அரசாங்கம் உள்ளடக்கியுள்ள அனைத்து விடயங்களையும் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.