எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம்

328 0

சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 11-ந் தேதி (இன்று) முதல் 14-ந் தேதி வரையிலான 4 நாட்கள் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து இன்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, மாலை 5.30 மணிக்கு வடபழஞ்சி, மாலை 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி.பட்டி, இரவு 8 மணிக்கு நிலையூர் கைத்தறிநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 12-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், மாலை 5.45 மணிக்கு வல்லநாடு, மாலை 6.30 மணிக்கு தெய்வசெயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவலாப்பேரி, இரவு 8 மணிக்கு ஒட்டநத்தம், இரவு 8.45 மணிக்கு ஒசநூத்து, இரவு 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி காலனியில் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அரவக்குறிச்சியில் மாலை 5.45 மணிக்கும், பள்ளப்பட்டியில் மாலை 6.30 மணிக்கும், இனங்கனூரில் இரவு 7.15 மணிக்கும், குரும்பப்பட்டியில் இரவு 8 மணிக்கும், ஆண்டிப்பட்டிகோட்டையில் இரவு 8.45 மணிக்கும், ஈசநத்தத்தில் இரவு 9.15 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.

இதேபோல சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கும், அதனைத் தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முத்துக்கவுண்டன்புதூரிலும், மாலை 6.45 மணிக்கு வாகராயம்பாளையத்திலும், மாலை 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோட்டிலும், இரவு 8 மணிக்கு கருமத்தம்பட்டியிலும் (சோமனூர் பவர் ஹவுஸ்), இரவு 8.30 மணிக்கு சாமளாபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.