பொலிஸ் பதிவு நடைமுறை குறித்து மக்களின் முறைப்பாடு!

259 0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டில் தோன்றியுள்ள பாதுகாப்பு நெருக்கடி நிலைவரத்துக்கு மத்தியில் தலைநகர் கொழும்பில் வீடுகளின் குடியிருப்பாளர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யும் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளின் பொலிஸ் நிலையங்களில் பதிவுப்படிவங்களைப் பெற்று தங்கள் வீடுகளில் வதிபவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து அலுவல்கள் காரணமாக கொழும்புவந்து தங்களுடன் தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை அந்த படிவங்களில் பூர்த்திசெய்து கையளித்துவருகிறார்கள்.

பொலிஸ் நிலையங்களில் அந்த பதிவுப்பத்திரங்களைப் பொறுப்பேற்பதற்கென்று கருமபீடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.எந்த விதமான கெடுபிடியும் இல்லாமல் மக்களினால் இதைச்செய்யக்கூடியதாக இருக்கிறது எனினும், தங்களால் கையளிக்கப்படுகின்ற படிவங்களிலும் அவற்றின் போட்டோ பிரதிகளிலும் அந்த கருமபீடஙகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது கையெழுத்தைப் போடுவதுடன் மாத்திரம் நின்றுவிடுகிறார்கள். பொலிஸ் நிலையத்தினதோ அல்லது அதன் பொறுப்பதிகாரியினதோ இறப்பர் முத்திரை குத்தப்படுவதில்லை என்று மக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கிறார்கள்.

வீடுகளுக்கு சோதனை நடவடிக்கைகளுக்காக வருகின்ற பொலிசாரிடமோ அல்லது பாதுகாப்பு படையினரிடமோ தங்களது பதிவுப்படிவம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது என்பதை உத்தரவாதப்படுத்துவதில் பிரச்சினை எழக்கூடும் என்று மக்கள் ஐயுறுகிறார்கள்.

பொலிஸ் நிலையங்களில் மாத்திரமல்ல தனியார் கடைகளிலும் கூட இந்த பொலிஸ்பதிவுப் படிவங்களைப் பெறக்கூடியதாக இருப்பதால், குடியிருப்பாளர்களின் விபரங்களை அவற்றில் நிரப்பிவிட்டு வெறுமனே ஒரு கையெழுத்தைப் போட்டு முறைகேடுகளை விசமிகள் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகிக்கும் மக்கள் பொலிஸ் நிலையங்களின் அல்லது பொறுப்பதிகாரிகளின் இறப்பர் முத்திரை குத்தப்பட்டே மக்களின் படிவங்கள் அவர்களிடம் கையளிக்கப்படுவதை பொலிஸ் திணைக்களம் உறுதிசெய்யவேண்டுமென்று கோருகின்றார்கள்.

இந்த விவகாரத்தை பதில் பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் கவனத்தில் எடுத்து ஆவனசெய்யவேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.