உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் அலாவ்தீன் எனும் வர்த்தகரை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கட்சியின் பொருளாளராக வைத்திருந்தமை சிறிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சொத்துக்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர் செய்துள்ள சில குற்றச்செயல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் அலாவ்தீன் எனும் வர்த்தகரை தன்னுடைய கட்சியினுடைய பொருளாளராக வைத்திருந்தமை சிறிய விடயமல்ல.
மொஹமட் இப்ராஹிம் எனும் வர்த்தகருடன் அவருக்கும் அவருடைய சகோதர சகோதரிகளுக்கும் உள்ள வர்த்தக தொடர்புகள் போதுமானளவு பேசப்பட்டது.
அதேபோல் இப்ராஹிம் குடும்பத்தின் மற்றுமொரு தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமாக இருந்த செப்புத் தொழிற்சாலைக்கு 25,000, 30,000 கிலோகிராம் பித்தளை ரிஷாட் பதியுதீனின் அமைச்சின் ஊடகவே வழங்கப்பட்டுள்ளது. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். செப்புத் தொழிற்சாலை சார்ந்த தொழில் முயற்சியுடன் ரிஷாட்டின் சகோதரர்கள் தொடர்புபட்டுள்ளனர். அதன் மூலம் அவர்கள் அதிகளவில் பணத்தை ஈட்டிக்கொண்டனர்.
துருக்கியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டு செயற்பட்டவர்கள் இங்கு வருகை தந்து கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிலையங்கள், சுற்றுலா நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக்கு துருக்கி தூதுவர் அறிவித்திருந்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பின்னணியிலிருந்து, இவர்களைப் பாதுகாப்பதாக இறுதியாக தெரிவிக்கப்பட்டது. அதனை பிரதமர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு அவர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானமொன்றை எடுப்பதற்கு இந்த தகவல்கள் போதுமானது என நினைக்கிறேன” என்று மேலும் தெரிவித்துள்ளார்.