நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள பரந்துப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க வேண்டாம் என்று சுதந்திர கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால மற்றும் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, பொதுஜன பெரமுன சார்பில் பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ், ஜகத் வெல்லவத்த ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதேவேளை பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பான அடுத்தக்கட்ட கலந்துரையாடல் இம்மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.