கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹுதீன் அஹமட் முவாத் எனும் தற்கொலைக் குண்டுதாரி, கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய மொஹம்மட் முபாரக் மொஹம்மட் அசாம் பயணித்த வாகனத்தில் சென்றுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வேனே கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பாதுகாப்பு தரப்பினரால் பின்னர் வெடிக்கவைக்கப்பட்டதாகவும் கொழும்பு பிரதான நீதிவானுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சி.ஐ.டி.யின் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுக்கும் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் ஈ,உ, 3 ஆம் அத்தியாயம் தண்டனை சட்டக் கோவையின் 296,300,315,317,408 ஆகிய அத்தியாயங்களின் கீழும் 1996 ஆம் ஆண்டின் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக கருதி விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் 2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஆகியவற்றின் ஊடாக திருத்தப்பட்ட 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதை தடைசெய்யும் இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கொச்சிக்கடை தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடாத்திய குண்டுதாரியின் சகோதரர்கள் இருவர் மற்றும் சகோதரி ஒருவரைக் கைது செய்து விசாரித்துவருவதாக சி.ஐ.டி. நேற்று நீதிவானுக்கு தெரிவித்தது.
இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத்தின் சகோதரர்களான அலாவுதீன் அஹமட் முஸ்கின், அலாஹுதீன் அஹமட் முஸ்தாக் மற்றும் அவர்களின் சகோதரியான பாத்திமா சுமையா அலாஹுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி கண்காணிப்பின் நிமித்தம் மன்றில் ஆஜராக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார். மட்டக்குளி பகுதியில் வைத்து அவர்களைக் கைது செய்ததாகவும், பாதுகாப்பு செயலாளரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய, சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிவானுக்கு தெரிவித்தனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் இந்த தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளூடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடாத்திய குண்டுதாரி, கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதல்தாரிக்கு சொந்தமான குறித்த வாகனத்தை தேவாலயத்திற்கு 75 மீட்டர் தொலைவில் நிறுத்தவிட்டு தேவாலயத்திற்குள் சென்றுள்ளமை சி.சி.டி.வி. காணொளிகளூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
அத்துடன் ,செயலிழக்கச் செய்ய முடியாதவாறு தயாரிக்கப்பட்டிருந்த குண்டு வைக்கப்பட்டிருந்த வாகனத்தை பாதுகாப்புத் தரப்பினர் வெடிக்கச் செய்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி அந்த வாகனத்தின் பாகங்களை அரச இரசாயனப் பகுப்பாய்விற்கு உட்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெறுமாறு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தற்கொலை குண்டுதாரியை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.