புதுச்சேரி தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் ஆகும் – தேர்தல் அதிகாரி தகவல்

293 0

ஒரு வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் புதுச்சேரி தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் ஆகும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பயிற்சி முகாம் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் தலைமையில் இந்த பயிற்சி நடந்தது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒவ்வொரு தொகுதியிலும் 5 வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான தொகுதி என மொத்தம் 155 வி.வி.பாட் எந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் 23-ந் தேதி எண்ணப்படும்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘ஒரு வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் சுமார் 25 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை வெளியிட முடியும். அதன்படி மறுநாள் (24-ந் தேதி) காலை சுமார் 8 அல்லது 9 மணிக்குத்தான் தேர்தல் முடிவு வெளியாகும். எனினும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி மாலையில் அறிவிக்கப்படும்’ என்று கூறினார்.