டெல்லியில் வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு, மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேர்தல் ஆணையமும் பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
டெல்லியில் எப்போதும் மெட்ரோ சேவை காலை 6 மணிக்கு தொடங்கும். ஆனால் வரும் மே 12ம் தேதி 2 மணி நேரத்திற்கு முன்னதாக அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வாக்குச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு செல்வதற்காக இந்த சிறப்பு வசதி மே 12 தேதி மட்டும் செய்யப்பட்டுள்ளது. துவாரகா பகுதி 21 முதல் வைஷாலி செல்லும் ரெயில் சேவை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். மே 12 க்கு பின்னர் வழக்கம் போல மெட்ரோ ரெயில் அட்டவணைப்படி இயங்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.