ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத் தலைவர் – பதுளை மறைமாவட்ட ஆயர் ஜே.வின்ஸ்டன் பெர்னாந்து, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மன்றத்தின் செயலாளர் – சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ், குருநாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி பெரேரா, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களோடு மேலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாந்து , அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அந்திராடி, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் , கண்டி மறைமாவட்ட ஆயர் ஜோசப் வியானி பெர்னாந்து, இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் கிளேட்டஸ் சந்திரிசிரி பெரேரா, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குண்டு தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் உள்ளகக் கலந்துரையாடல்களே இடம்பெற்றன.
பாதுகாப்பு நடவடிககைகள் குறித்தே இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு அனைத்து மறை மாவட்ட ஆயர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்ததோடு, சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அடிப்படைவாதம் தலைதூக்கும் போது நாடு எவ்வாறு அபிவிருத்தி நோக்கி செல்லும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆயர்கள், மதவாதத்தால் தோன்றுகின்ற அடிப்படைவாதம் நாட்டில் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு அது அச்சுறுத்தலாகவே அமையும் என்று தாம் அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ள கோரிக்கைகளின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.