’ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நீதிமன்றம் செல்வேன்’

334 0

நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டில் சிறைதண்டனை அனுபவித்து வரும் ஞானசாரருக்கு,பொதுமன்னிப்பு வழங்குவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமென சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென பலரும் கோரி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர். “ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். எனக்கு தெரிந்தவரையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால், ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இதனை தவிர வேறு எந்தவகையிலும் அவரை விடுதலை செய்ய முடியாது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு, பொதுமன்னிப்பு வழங்குவது என்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கிறேன். நீதிமன்ற கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஞானசார தேரரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமாக இருந்தால், அதற்கு எதிராக நான் நீதிமன்றம் செல்வேன்.” என்றார்