முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் முஸ்லிம் கடைகளை புறக்கணியுங்கள் என ஏனைய இனவாத குழுக்கள் பரப்பும் செய்திகள் குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தாது ஏன்? இது தேசியமாக பாரிய பிளவை ஏற்படுத்தும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி சபையில் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியாத அரசாங்கத்தால் எவ்வாறு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட வியாபாரப் பண்ட அறவீடுகள் கடட்டளைசட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
இன்று நாட்டின் பாரிய ஹோட்டல்கள் மட்டும் அல்ல சாதாரண நடுத்தர சுற்றுலா விடுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் தாக்கமும் நாட்டுக்கு பாரிய தாக்கத்தையே ஏற்படுத்தும். முஸ்லிம் மக்களின் கடைகளுக்கு மக்கள் செல்ல மறுக்கின்றனர். முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்ற அனாவசிய செய்திகளை பரப்பி மக்களை குழப்பிவருகின்றனர்.
இதனால் நாட்டுக்கு தான் பிரச்சினையாக அமையும். இந்த தாக்குதலை ஒரு இனத்தின் தாக்குதலாக மட்டுமே அடையாளப்படத்த வேண்டாம். இனவாதத்தை மதவாதத்தை இதில் உருவாக்க வேண்டாம். அரசாங்கம் இதற்கு தீர்வு காண எந்த முயற்சிகளையும் முன்னெடுக்க வில்லை. அரசாங்கம் இவற்றை கருத்தில் கொள்ளாது அரசியல் காரணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
எமது அரசியல் வாதிகளுக்கு நாட்டின் தூரநோக்கு திட்டம் என ஒன்றும் இல்லை . அடுத்த ஒரு வருடத்தில் நாட்டுக்கு வரும் நெருக்கடி குறித்து இந்த ஆட்சியாளர்கள் எந்த முன்னயத்தமும் இல்லாமலேயே ஆட்சி செய்கின்றனர் .
பாடசாலை மாணவர்களின் நம்பிக்கையையே வெற்றிகொள்ள முடியாத இந்த அரசாங்கம் எவ்வாறு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆட்சியாளர்களால் நாட்டின் பொருளாதாரதிற்கு தீர்வு காண முடியாது. இது பலவீனமான அரசாங்கம் என அவர் குறிப்பிட்டார்.